
பெங்களூர்: ஜூலை 8-
வருமானத்திற்கு அதிகமாக நூற்றுக்கணக்கான மடங்கு சொத்து சேர்த்ததாக, 5 பொறியாளர்கள் உள்பட 10 அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் லோகாயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி வேட்டை நடத்தினர். தோட்டக்கலை, நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த இந்த அதிகாரிகளின் பெங்களூரு, ராய்ச்சூர், துமகூரு, கலபுரகி, சிவமோகா, சித்ரதுர்கா ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதலே ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த வேட்டையில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள், சொகுசு கார்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் லோகாயுக்தா அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. இதில் ராய்ச்சூர் கிருஷ்ணா பாக்யா ஜலநிகம் செயற் பொறியாளர் பசனகௌடா பாட்டீல், சித்ரதுர்கா தோட்டக்கலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சங்கர், சித்ரதுர்கா மண்டல வன அதிகாரி துக்கப்பா, பெங்களூரு பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் நரேந்திர குமார், கே.ஆர்.டி.எல். கண்காணிப்பு பொறியாளர் பிரவீன் பி. ஸ்ரீஹரி, விவசாய உற்பத்தி சந்தைக் குழு துணை இயக்குனர் புஷ்பா, துமகூரு சிறுபாசனத் துறை உதவி பொறியாளர் மதுசூதன், பெங்களூரு தெற்கு கும்பளகோடு பஞ்சாயத்து அதிகாரி திம்மேகௌடா, சிவமோகா உதவி வனப் பாதுகாவலர் கிரண் அங்கடி மற்றும் கலபுரகி கெஸ்காம் உதவி செயற் பொறியாளர் அமிர்தராவ் ஆகியோர் லோகாயுக்தா வலையில் சிக்கினர். இவர்களது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


















