
புதுடெல்லி, ஜூலை 9- பணி நிமித்தம் காரணமாக பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகன உரிமையாளர்கள், மறு பதிவு செய்யாமல் தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் காலத்தை 3 ஆண்டாக நீட்டிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளது. பணியிட மாற்றம் மற்றும் ஒப்பந்தப் பணி காரணமாக பலர் வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. மத்திய அரசு பணி மற்றும் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் சிலர் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் பெற்று வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, வேறு மாநிலத்தில் ஓராண்டுக்கு மேல் பயன்படுத்தினால் அதன் உரிமையாளர் புதிய மாநிலத்தில் வாகனத்தை மறு பதிவு செய்ய வேண்டும். இது பணி நிமித்தம் காரணமாக வேறு மாநிலங்களுக்கு அடிக்கடி செல்பவர்களுக்கும், ஒப்பந்தப் பணியை முடித்து விட்டு மீண்டும் சொந்த மாநிலம் திரும்புபவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதை எளிதாக்குவதற்காக, வேறு மாநிலங்களில் மறு பதிவு செய்யாமல் வாகனங்களை 3 ஆண்டுகள் வரை பயன்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் கடந்த வாரம் விருப்பம் தெரிவித்தது. வாகனங்களை மறு பதிவே செய்யாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்தும் வகையில் பாரத் சீரிஸ் (தேசிய அளவிலான) பதிவு முறைக்கும், மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை மேலும் வலுசேர்க்கும் என கூறப்படுகிறது.


















