
அயோத்தி: ஜூலை 9-
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்கொடை வசூலித்தது எஸ்ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகவும் நன்கொடை வசூலித்ததில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் நெருங்கிய உதவியாளரான ராம்ஷங்கர் யாதவ் (என்ற தின்னு யாதவ்) என்பவரும் அடங்குவார். இந்த சர்ச்சை வெடித்ததை அடுத்து, சம்பத் ராய் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் விசாரணையின் போது, போலியாக தயாரிக்கப்பட்ட நன்கொடை ரசீதுகளை வழங்கி பக்தர்களிடம் இருந்து பணம் வசூலித்ததை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட ரசீது புத்தகங்கள் அசல் ரசீதுகளைப் போன்றே அச்சு அசலாக இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் போலி ரசீதுகளில் அறக்கட்டளையின் முத்திரையும் இருந்ததால், அவை உண்மையானவை போலவே தோற்றமளித்தன. இதனால் பக்தர்கள் எவ்வித மோசடியையும் சந்தேகிக்கவில்லை. ஆரம்பத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த போலி ரசீதுகளைப் பயன்படுத்தி நன்கொடை பெற்றுக் கொண்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன. இதுபோன்ற போலி ரசீதுகளை வழங்கி எவ்வளவு பணம் முறைகேடு செய்துள்ளனர் என்பதை எஸ்ஐடி இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. இருப்பினும், ராமர் கோயில் நிர்வாகம் புதிய ஆன்லைன் ரசீது முறையை அறிமுகப்படுத்திய பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த காகித ரசீதுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். அதன் பின்னர் பக்தர்கள் தங்களின் நன்கொடைகளை நேரடியாக கோயிலின் வங்கிக் கணக்குக்கு மாற்றத் தொடங்கினர் அல்லது கோயில் வளாகத்துக்குள் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட நன்கொடை கவுன்ட்டரிலிருந்து ரசீதுகளைப் பெற்றனர். இதற்கிடையில், நன்கொடை, காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 6 ஊழியர்கள், காலப் போக்கில் சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கையாடல் செய்தது எஸ்ஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.


















