Home மாவட்டங்கள் பெங்களூர் ஆன்லைன் பயங்கரவாத கும்பல்: கர்நாடகா உள்பட 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

ஆன்லைன் பயங்கரவாத கும்பல்: கர்நாடகா உள்பட 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

பெங்களூரு: ஜூலை 9-
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் ஆன்லைன் மூலம் தொடர்பு வைத்திருந்த நெட்வொர்க்கை உடைக்க தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கர்நாடகா, ஆந்திரா, பீகார், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று அதிகாலை முதலே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த முகமது ரெஹ்மத்துல்லா ஷெரீப் (வயது 23) என்ற வாலிபரை கடந்த மார்ச் மாதம் உள்ளூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அவர் தடை செய்யப்பட்ட ‘ஐஎஸ்ஐஎஸ்’ மற்றும் ‘அல்கொய்தா’ போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவில் கிலாபத் ஆட்சியை நிறுவ சமூக வலைதளங்களில் ஜிகாதி வீடியோக்களை பரப்பியது தெரியவந்தது.
முகமது ரெஹ்மத்துல்லாவுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ‘அல்-ஹகீம் ஷுகூர்’ என்ற வெளிநாட்டு பயங்கரவாத ஏஜென்ட் (ஹேண்ட்லர்) அறிமுகமாகியுள்ளார். அவன் மூலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் தொடர்பு எண்கள் இவனுக்கு கிடைத்துள்ளன.
அதன்படி, பீகாரைச் சேர்ந்த ஷாத்மான் தில்காஷ், ஹைதராபாத்தின் சயீதா பேகம், டெல்லியின் லக்கி அகமது, ராஜஸ்தானின் ஜிஷான், மகாராஷ்டிராவின் ஷாருக்கான் மற்றும் கர்நாடகாவின் பல்லாரியைச் சேர்ந்த அப்துல் சலாம் ஆகியோருடன் முகமது ரெஹ்மத்துல்லா தொடர்பில் இருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. தன் கையில் எடுத்தது. இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய நபர்களின் வீடுகள் மற்றும் ரகசிய இடங்களை குறிவைத்து, இன்று கர்நாடகாவின் பல்லாரி உட்பட 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.