Home மாவட்டங்கள் பெங்களூர் மந்திரவாதி பாபாவை கடத்தி ரூ. 4.25 லட்சம் கொள்ளை

மந்திரவாதி பாபாவை கடத்தி ரூ. 4.25 லட்சம் கொள்ளை

பெங்களூரு: ஜூலை 10:
வீட்டில் தோஷங்களை நீக்கி அமைதி பூஜை செய்து தரும் சாமியார் (பாபா) ஒருவரைக் கடத்தி, ஆயுதங்களால் தாக்கி ரூ. 4.25 லட்சத்தைப் பறித்த 4 பேரை சம்பிகேஹள்ளி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தும்கூரைச் சேர்ந்த ஆரிப், ஆதில், சிக்கபானவாராவைச் சேர்ந்த இம்ரான் மற்றும் ஆர்.டி. நகரைச் சேர்ந்த கதீர் ஆகியோரே கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் ஆவர். எலஹங்காவில் வசிக்கும் மந்திரவாதியான பாபா முகமது தாரிக் உசேன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு பாபா தாரிக் உசேனைத் தொடர்பு கொண்ட ஆரிப், தன் வீட்டில் அமைதி பூஜை நடத்த வேண்டும் எனக் கூறி முன்பணமாக ரூ. 10 ஆயிரத்தை ஆன்லைனில் அனுப்பியுள்ளார்.
ஆனால், சில காரணங்களால் பாபாவால் 3 நாட்களுக்கு வர முடியவில்லை.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி, பாபாவை அழைத்து வர ஆரிப் கார் ஒன்றை அனுப்பியுள்ளார். காரில் செல்ல பாபா மறுத்தபோது, கும்பலாக வந்த அவர்கள் பாபாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட பாபாவை தும்கூர் எல்லைக்குக் கொண்டு சென்றபோது, அங்கு மூன்று பேர் காத்திருந்தனர். அப்போது ஆதில் என்பவர், “முன்பு நீ அமைதி பூஜை செய்வதாகக் கூறி பணம் வாங்கினாய், ஆனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை” என்று பழைய பஞ்சாங்கத்தை விவாதித்து தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்த பாபாவை, நான்கு பேரும் சேர்ந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து பாபாவின் மொபைல் பாஸ்வேர்ட் மற்றும் யுபிஐ பின் நம்பரைப் பறித்த கொள்ளையர்கள், அவரது வங்கிக் கணக்கில் 5 லட்சத்திற்கும் மேல் பணம் இருப்பதைப் பார்த்துள்ளனர். உடனடியாக ஆரிப் தன் கணக்கிற்கு ரூ. 13 ஆயிரத்தை மாற்றியுள்ளார். அன்று இரவு பாபாவை ரகசிய இடத்தில் சிறை வைத்த கும்பல், மறுநாள் அவரது ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் வரவழைத்து, அவரை ஒரு தனியார் வங்கிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளது.வங்கியிலிருந்து பாபாவின் கையெழுத்தைப் பெற்று ரூ. 4.25 லட்சத்தை வித்ரா செய்துள்ளனர். பணம் கைக்கு வந்ததும், பாபாவை காரில் ஏற்றிக்கொண்டு தாஸ்பேட்டை வழியாக தொட்டபல்லாப்பூர் எல்லைக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்டுள்ளனர். “இதைப்பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம்” என மிரட்டிவிட்டு, அவரது மொபைலை அவரிடமே கொடுத்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
பாபா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தற்போது 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.