
விசாகப்பட்டினம், ஜூலை 10- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சேப்பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் அண்மையில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி கரை திரும்பவில்லை.இதையடுத்து குடும்பத்தினர் அளித்த தகவலின்படி அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இதில் கடலோர ரோந்துப் படையினரும் ஹெலிகாப்டர் உதவியுடன் 72 மணி நேரமாக தொடர்ந்து தேடினர். எனினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அந்த 7 மீனவர்களில் காரி சின்னா மட்டும் உயிர் தப்பி கரை திரும்பினார். மற்றவர்கள் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர்களின் உடல்களை தேடும் பணி தொடங்கியது. எனினும் அவை கிடைக்கவில்லை. இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு நியமித்த 3 உறுப்பினர் குழு விசாரணை நடத்தியது. இக்குழு 6 மீனவர்களும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அரசுக்கு அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் மீன்வளத்துறை அமைச்சர் கே.ரவீந்திரா நேற்று 6 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.



















