Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் இனி பெர்மிட் கட்டாயம்

பெங்களூரில் எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் இனி பெர்மிட் கட்டாயம்

பெங்களூரு: ஜூலை 10-
பெங்களூரு மாநகரில் இனி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் இயக்கப்பட வேண்டுமானால், அதற்கு ’பெர்மிட்’ (அனுமதி சீட்டு) வாங்குவது கட்டாயம் என்று போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை சி.என்.ஜி, எல்.பி.ஜி மற்றும் பெட்ரோல் ஆட்டோக்களுக்கு மட்டுமே பெர்மிட் கட்டாயமாக இருந்தது. ஆனால், தற்போது எலக்ட்ரிக் ஆட்டோக்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வருவதாலும், அதனால் ஏற்படும் சட்டச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டும் போக்குவரத்துத் துறை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, இனிமேல் யாராவது புதிதாக எலக்ட்ரிக் ஆட்டோ வாங்க நினைத்தால், அவர்களிடம் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆட்டோ பெர்மிட் ஆகிய இரண்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவை இல்லையென்றால் புதிய எலக்ட்ரிக் ஆட்டோக்களை விலைக்கு வாங்கவே முடியாது. போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணம் பயணிகளின் பாதுகாப்பு தான். பெர்மிட் இல்லாத ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணிக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து பயணிகளுக்கோ அல்லது டிரைவருக்கோ ஒரு பைசா கூட நஷ்டஈடு கிடைக்காது. விதிமுறைகளின்படி, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு விமா (இன்சூரன்ஸ்) சலுகை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண ஆட்டோக்களுக்கு பெர்மிட் பெற போக்குவரத்துத் துறைக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், சுற்றுச்சூழல் மாசற்ற எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான பெர்மிட்டை முற்றிலும் இலவசமாக வழங்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. சமீபகாலமாக, எலக்ட்ரிக் ஆட்டோ ஷோரூம் உரிமையாளர்கள் தங்களது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக, ஆட்டோ டிரைவர்களிடம் தவறான தகவல்களைக் கூறி வந்துள்ளனர். “சி.என்.ஜி, எல்.பி.ஜி ஆட்டோக்களுக்குத்தான் பெர்மிட் வேண்டும், எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு பெர்மிட் தேவையில்லை” என்று நம்ப வைத்து ஆயிரக்கணக்கான இவி ஆட்டோக்களை விற்றுத் தீர்த்துள்ளனர். பெங்களூருவில் தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான சி.என்.ஜி மற்றும் எல்.பி.ஜி ஆட்டோக்கள் பெர்மிட்டுடன் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், எலக்ட்ரிக் ஆட்டோக்களில் மட்டும் பெர்மிட் இல்லாமல் இருந்தது.
இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில முன்னணி ஆப் சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், பெர்மிட் விதிமுறைகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான எலக்ட்ரிக் ஆட்டோக்களைக் கூண்டோடு விலைக்கு வாங்கின. அதுமட்டுமின்றி, வெளிமாநில டிரைவர்களைக் கூட்டிவந்து இங்கே ஆட்டோ ஓட்டவிட்டன. இது உள்ளூர் கன்னட ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்ததால், அவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.