
பெங்களூரு: ஜூலை 10-
பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவின் முக்கியப் பகுதிகளில் ‘நோ பார்க்கிங்’ இடங்களில் கண்டபடி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விதிகள் மீறி நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு அவர் பூட்டு போட்டார். அப்போது, பொதுமக்களுக்கும் அவசர கால வாகனங்களுக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் கிடுக்கிப்பிடி உத்தரவிட்டார்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
நகர சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கண்டபடி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு முதற்கட்டமாக போக்குவரத்து போலீசார் தரப்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த நோட்டீஸ் நகல் வாகன உரிமையாளரின் முகவரிக்கு அனுப்பப்பட்ட நாளில் இருந்து, சரியாக 7 நாட்களுக்குள் அவர்கள் அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட அந்த 7 நாட்களுக்குள் வாகன உரிமையாளர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வராவிட்டால், போக்குவரத்து போலீசார் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்குவார்கள். அதன்படி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த வாகனங்கள் அனைத்தும் உடனடியாக கிரேன் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.
இதன் பின்னர் சட்டப்படியான அபராத தொகையைச் செலுத்திய பிறகே வாகனங்கள் ஒப்படைக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் ‘நோ பார்க்கிங்’ பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்த்து, போக்குவரத்து விதிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


















