Home மாவட்டங்கள் பெங்களூர் 3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்

3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூர்: ஜூலை 15-
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கென்னத், “நான்தான் 3 பேரையும் கொலை செய்தேன்” என்று போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கொடூரக் கொலை தொடர்பாக சோமசுந்தரின் மகள் ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் தொடக்கத்தில், ஸ்வேதா தனது தாயைக் கொன்றதாகக் கூறினார். ஆனால், கென்னத்தோ 3 பேரையும் நானே கொன்றதாகக் கூறினான். இதனால் குழப்பமடைந்த போலீசார், உண்மை கண்டறியும் ‘பிரைன் மேப்பிங்’ (Brain Mapping) சோதனை நடத்த நீதிமன்ற அனுமதி பெற்று தயாராகினர். இந்த சோதனைக்கு பயந்து, தற்போது கென்னத் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
“இந்தக் கொலையில் ஸ்வேதாவுக்கு எந்தப் பங்கும் இல்லை. நானே 3 பேரையும் குத்திக் கொன்றேன்” என்று கென்னத் கூறியுள்ளார். எனினும், உயிரிழப்பதற்கு முன் தந்தை சோமசுந்தர் அளித்த மரண வாக்குமூலத்தில், கென்னத் மற்றும் ஸ்வேதா ஆகிய இருவரும் சேர்ந்தே தங்களைக் குத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். போலீசாரின் தீவிர விசாரணையில், காதலி ஸ்வேதா கொலைக்கு உடந்தையாக இருந்து உதவி செய்ததும், கென்னத் 3 பேரையும் நேரடியாகக் குத்திக் கொலை செய்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.