
ரஷ்யா: ஜூலை 15-
ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் ஏவப்பட்ட இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன், 49, தன் முதல் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளார். இப்பயணத்தின்போது, நீண்டகால விண்வெளி பயணத்தால் ஏற்படும் உடலியல் விளைவுகள் குறித்த ஆய்வை மேனன் மேற்கொள்ளவிருக்கிறார்.
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு, அவ்வப்போது சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவர். அவர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவர்.
இதன்படி, ரஷ்யா தற்போது மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் உள்ள பைகோனுார் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்., – 29 விண்கலம் வாயிலாக, மூன்று பேர் புறப்பட்டனர்.
இதில், அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான அனில் மேனனும் ஒருவர். இவருடன், ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அனில் மேனன், 8 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்.நீண்டகால விண்வெளி பயணம் மனித உடலின் ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தன் உடலையே ஒரு சோதனைப் பொருளாக கொண்டு ஆய்வு நடத்த உள்ளார்.மேலும், நீண்ட துார விண்வெளி பயணங்களின் போது, பூமியின் உதவியின்றி விண்வெளி வீரர்களே, தங்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.இது தவிர, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட மருத்துவ கருவிகளுக்கு தேவையான செமிகண்டக்டர்களை விண்வெளியில் புவிஈர்ப்பு இல்லாத சூழலில் உற்பத்தி செய்யும் ஆய்விலும் அவர் ஈடுபட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.













