Home செய்திகள் தேசிய செய்திகள் நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய கூடாதா?

நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய கூடாதா?

டெல்லி, ஜூலை 17- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி ஆரம்பமாக போகிறது.. இதற்காக வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பேண மக்களவை செயலகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நவீன மின்னணு சாதனங்களால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு, எம்.பி.க்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் நாடாளுமன்றத்தின் தனி உரிமையையும், விவாதங்களின் ரகசியத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், மக்களவை செயலகம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மிக முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் பேனா வடிவிலான கேமராக்கள் போன்ற சாதனங்கள் மிக எளிதாகவே கிடைக்கின்றன. இந்த நவீன மின்னணு சாதனங்கள், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நடைபெறும் விவாதங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை ரகசியமாக படம்பிடிக்கவோ அல்லது ஒலிப்பதிவு செய்யவோ பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய செயல்கள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் குறைப்பதோடு, உறுப்பினர்களின் அந்தரங்கப் பாதுகாப்பிற்கும், நாடாளுமன்றத்தின் தனி உரிமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும். அதனால் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இத்தகைய நவீன சாதனங்களை உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என்று செயலகம் அறிவுறுத்தியுள்ளது.