Home செய்திகள் தேசிய செய்திகள் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

கொல்கத்தா, ஜூலை 17- கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே கிளம்பிவிடுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் மம்தா பானர்ஜி, அமலாக்கதுறை மற்றும் CBI போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு பயந்து பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட நினைப்பவர்கள், கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்யாமல் இப்போதே வெளியேறி விடலாம் என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி-யான கோயல் மல்லிக், மதன் மித்ரா மற்றும் மனிஷ் குப்தா ஆகியோர் சமீபத்தில் கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து மம்தாவின் இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதனிடையே 1997-ல் காங்கிரஸிலிருந்து விலகி தனியாக திரிணாமுல் காங்கிரஸை பூஜ்ஜியத்தில் இருந்து கட்டியெழுப்பியது போல, தற்போதும் கட்சியை மீண்டும் வலுவாக உருவாக்க முடியும் என மம்தா உறுதிபட தெரிவித்து உள்ளார். இதனிடையே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை 21 “தியாகிகள் தினம்” (Shaheed Diwas) கட்சியின் இரு பிரிவினருக்கு இடையே பெரும் மோதலாக மாறியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான தியாகிகள் தின பேரணி கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் அருகே நடைபெற உள்ள நிலையில், தாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தியாளர்கள் குழு, ஜவஹர்லால் நேரு சாலையில் தனியாக ஒரு போட்டிப் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.