
லண்டன், ஜூலை 17- இந்திய ஒருநாள் அணிக்குள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கொண்டு வருவதற்காக ரோகித் சர்மாவை நீக்க கம்பீர் மற்றும் அகர்கர் தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெய்ஸ்வாலை கொண்டு வருவதற்காக ரோகித் சர்மாவை நீக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். 2027ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்கா மண்ணில் நடக்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக தான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒருநாள் அணியை கம்பீர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் தடுமாறி வருகிறார். அவர்களும் ஃபார்மில் இருப்பதால், எவ்வளவு எளிதாக இந்திய அணியில் இருந்து பிசிசிஐ-யால் நீக்க முடியவில்லை. இப்படியான சூழலில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்து சதங்களை விளாசி அசத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ஜெய்ஸ்வால், ஒருநாள் கிரிக்கெட்டில் போதுமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை.ரோகித் சர்மா ஆடுவதால், ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்க முடிவதில்லை. இதனிடையே சுப்மன் கில் அண்மையில் பேசுகையில், லண்டன் வந்த போதே விராட் கோலியுடன் மீட்டிங் நடந்தது. அப்போதே உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், சூழல் எப்படி இருக்கும், தென்னாப்பிரிக்கா பிட்ச் குறித்தெல்லாம் பேசியதாக கூறினார். ஆனால் சுப்மன் கில் இந்த ஆலோசனையை ரோகித் சர்மாவுடன் மேற்கொள்ளாதது சந்தேகத்தை கிளப்பியது. மறுபுறம் இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேவை உள்ளதாக கம்பீர் மறைமுகமாக வலியுறுத்தி கொண்டே இருந்தார். இதன் காரணமாகவே இஷான் கிஷன் இந்திய ஒருநாள் அணிக்குள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இஷான் கிஷனிடம் கன்சிஸ்டன்சி பிரச்சனை இருக்கிறது. அதேபோல் வெளிநாடுகளில் இஷான் கிஷன் எப்படி விளையாட வேண்டும் என்பதே அறியாமல் இருக்கிறார். அந்த விஷயத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கில்லி. அதேபோல் ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டால், கட்டுப்பாட்டை தனது கைக்குள் கொண்டு வர முடியும் என்று கம்பீர் நம்புகிறார். இன்னொரு பக்கம் விராட் கோலி என்ற ஒற்றை வீரரை இந்திய அணியின் பிராண்ட்டாகவும், சுப்மன் கில்லை இளவரசனாகவும் கட்டமைக்க முடியும். கிட்டத்தட்ட 2011 உலகக்கோப்பை போல் இந்திய அணி அடுத்த உலகக்கோப்பை தொடரை அணுக முடிவு செய்துள்ளது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சோகம் அடைந்திருக்கின்றனர்.
















