
டெஹ்ரான், ஜூலை 18- அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை தாக்கி அழித்ததாக ஈரான் கூறியுள்ளது.புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் கடந்த 6 நாட்களாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் பாலங்கள், ரயில் நிலையங்கள், மின் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஈரான்ஷர் ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் 3 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் கூறியது. இந்நிலையில் ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தினோம். இதில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் பல சேதம் அடைந்தன. ஜோர்டான் மக்களும், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும். சிரியாவில் அல்-டன்ஃப் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தையும் தாக்கினோம். ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் வரை, இங்கிருந்து எரிபொருள் கப்பல்கள் எதுவும் கடந்து செல்ல அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
















