
நியூயார்க், ஜூலை 18- 1958 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசில் அணியின் ஜாம்பவான் பீலே அணிந்து விளையாடிய ஜெர்சி 49 லட்சம் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47.18 கோடி) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. 1958-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசிலும், ஸ்வீடனும் விளையாடின. இதில் பிரேசில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த இறுதிப் போட்டியின்போது ஜாம்பவான் பீலே, 2 கோல்களை அடித்து அணிக்கு வெற்றித் தேடித் தந்தார். இந்நிலையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது அவர் அணிந்து விளையாடிய ஜெர்ஸி நேற்று முன்தினம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் அது இந்திய மதிப்பில் சுமார் ரூ.47.18 கோடிக்கு எடுக்கப்பட்டதாக ஏல நிறுவனமான சோத்பி தெரிவித்துள்ளது.














