
புதுடெல்லி: ஜூலை 22-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து அதிர்ச்சி தந்த டிரம்ப் தற்போது புதிய வரியை அறிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளின் மீது கடுமையான இறக்குமதி வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இது இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமையும். ஏனெனில் உலகிலேயே அதிகளவு ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான்.
மூன்று நிலைகளாக வரி விதிப்பு செயல்படுத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ளார். இதன்படி முதல் 2 ஆண்டுகள் இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு எந்தவிதமான இறக்குமதி வரியும் விதிக்கப்படாது. இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு, இந்த மருந்துகளின் மீது 100% இறக்குமதி வரி விதிக்கப்படும். அதற்கு அடுத்த கட்டமாக, இந்த வரி 200% ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். உலகிலேயே அதிக அளவில் ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த வரி விதிப்பு திட்டம் அமலுக்கு வரும்போது, இந்திய மருந்து நிறுவனங்களின் லாப வரம்பு பெருமளவு குறையும். மேலும், அமெரிக்க சந்தையில் இந்திய மருந்துகளின் விலை கணிசமாக உயரும்.
அமெரிக்க சந்தையில் இந்திய மருந்துகளின் விலை உயர்ந்தால் மக்கள் வேறு நாடுகளின் குறைந்த விலை மருந்துகளுக்கு செல்வார்கள். இதனால் ஏற்றுமதி குறைந்து இந்திய மருந்து நிறுவனங்களுக்கு லாபம் குறையும். இதனால் அமெரிக்கா விடுத்து வேறு சந்தைகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை உண்டாகும். இந்த நீண்டகால வரி திட்டம் காரணமாக இந்திய மருந்து நிறுவனங்கள் இனிவரும் காலங்களில், தங்களது உற்பத்தி மற்றும் முதலீட்டு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதாவது உற்பத்தி மையங்களை அமெரிக்காவிலேயே நிறுவும் நிர்ப்பந்தம் உண்டாகும்.













