
புதுடெல்லி: ஜூலை 27-
ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக பீகாரிலும் மாணவர்கள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பியிருந்தனர். இதை தொடர்ந்து தற்போது அவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளை கண்டித்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் ஜூலை 20 அன்று உச்சத்தை தொட்டது. அதாவது, மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியை நடத்தியிருந்தனர். இந்த பேரணியை தடுக்க அதிவிரைவு படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மொத்தம் 7 ரவுண்டுகள் சுடப்பட்டதில், 5 மாணவர்கள் காயமடைந்தனர். இதில் டெல்லி பல்கலைக்கழக மாணவரான 19 வயது சாஹில், தனது வலது கண் பார்வையை இழக்கும் அளவுக்கு படுகாயமடைந்தார். அதேபோல ஷேக் இர்ஷாத் மன்சூரி எனும் 25 வயது இளைஞரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இது தவிர ஒரு பெண் நிருபரும் காயமடைந்திருந்தார்.
அமைதியாக, ஆயுதங்கள் ஏதும் இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏன் பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது? இதற்கு யார் அனுமதி கொடுத்தது? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.













