
பெங்களூரு: ஜூலை 30- பெங்களூரு அருகே பெரியம்மாவுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கர்நாடக மாநிலம் நெலமங்கலா அடுத்துள்ள பீரவாரா கிராமத்தைச் சேர்ந்தவர் லிகிதா (வயது 10). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை லிகிதாவின் தாய் அவருக்கு காலை உணவு தயார் செய்து கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, லிகிதா தனது பெரியம்மாவுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நெலமங்கலாவில் இருந்து குனிகல் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, பீரவாரா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த லிகிதா மீது பலமாக மோதியது.
இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த சிறுமி லிகிதா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற பெரியம்மா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குதூர் பிரிவு போலீசார், லிகிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பீரவாரா கிராமப் பகுதியில் அடிக்கடி இதுபோன்று விபத்துகள் நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், பாதசாரிகளுக்காக அங்கு உடனடியாக ஆகாய நடைமேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.













