சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு பல்வேறு பிரம்மாண்டமான திட்டங்களை அறிவித்துள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சி, விளையாட்டுத் துறை மேம்பாடு மற்றும் உயர்கல்வி சீரமைப்பு என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.அண்ணன் சீராக 8 கிராம் தங்க நாணயம் & பட்டுப்புடவை இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கிய மகிழ்ச்சியான தருணம். பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதி, அவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை அண்ணன் சீராக’நமது அரசு வழங்கவுள்ளது என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். கல்வி மற்றும் டிஜிட்டல் புரட்சி டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தை அதிநவீன மாநிலமாக உருவாக்கும் இலக்கின் கீழ், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை: ஒட்டுமொத்தமாக ரூ.44,527 கோடி ஒதுக்கீடு. உயர்கல்வித் துறை: ரூ.8,393 கோடி ஒதுக்கீடு. வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை உயர்த்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்படும். AI பாடத்திட்டம்: உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் அடங்கிய ‘நிபுணர் குழு’ அமைக்கப்படும். பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI திறன் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்கள்: ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) நிறுவப்படும்.












