
மதுரா: ஆக. 10-
கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுராவில் நேற்று போலீஸார் குவிக்கப்பட்டனர். கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க ஆகஸ்ட் 9-ம் தேதி கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி ஏராளமானோர் நேற்று மதுராவுக்கு சென்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரா முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். நான்கு முக்கிய இந்து மதத் தலைவர்கள் உட்பட பலர் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஷாயி ஈத்கா மசூதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. யாகத்தில் பங்கேற்ற மதத் தலைவர்கள் கூறும்போது, “கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வரும் டிசம்பர் 6-ம் தேதி மீண்டும் கர சேவைக்கு அழைப்பு விடுக்கிறோம்.
அயோத்தி ராமர் கோயில் போன்று மதுராவிலும் பிரம்மாண்ட கிருஷ்ணர் கோயிலை கட்ட திட்டமிட்டு உள்ளோம். இதற்காக ராஜஸ்தானில் இருந்து கற்களை வரவழைத்து இருக்கிறோம். எங்களது கிருஷ்ண ஜென்ம பூமி இயக்கம், நாடு தழுவிய இயக்கமாக மாறும்” என்றனர். மதுரா போலீஸ் எஸ்பி ராஜீவ் குமார் கூறும்போது, “மதுரா நகருக்குள் புதியவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. கர சேவைக்காக மதுராவுக்கு வந்தவர்களை கண்ணியமாக பேசி திருப்பி அனுப்பி உள்ளோம். மதுரா எல்லைகளில் தடுப்புகளை அமைத்து அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மதுரா முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை” என்றார்.













