Home செய்திகள் தேசிய செய்திகள் ராணுவத்தினருக்கு உறுதுணை; மோப்ப நாய் டைசனுக்கு சிறப்பு விருது

ராணுவத்தினருக்கு உறுதுணை; மோப்ப நாய் டைசனுக்கு சிறப்பு விருது

புதுடில்லி, ஆக. 16- காஷ்மீரில், பதுங்குமிடத்தை நோக்கி முன்னேறியபோது பயங்கரவாதிகளால் சுடப்பட்ட இந்திய ராணுவ மோப்ப நாய் டைசனுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் 2 பாரா ஸ்பெஷல் போர் பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் மோப்ப நாய் டைசன். போர்க்களத்தில் காட்டும் வீரத்தையும் தகுதியான சேவையையும் அங்கீகரிக்கும் அதிகாரப்பூர்வ இராணுவப் பாராட்டு விருதான எம்.ஐ.டி-க்கு (MiD) தேர்ந்தெடுக்கப்பட்ட 89 வீரர்களில் ராணுவ நாய் டைசனும் ஒன்று. இந்த ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் கிஷ்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது ​டைசன் படைகளுக்கு முன்னால் சென்று, மறைந்திருந்த பயங்கரவாதிகளின் மறைவிடத்தை துல்லியமாக கண்டுபிடித்தது.தேடுதல் வேட்டையின் போது காலில் குண்டு காயம் ஏற்பட்ட போதிலும், சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னேறிச் சென்று பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி டைசன் தனது துணிச்சலை வெளிப்படுத்தியது. இந்தச் துணிச்சலான செயலால் பாதுகாப்புப் படையினருக்குத் துல்லியமான தகவல் கிடைத்து, பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். மோப்ப நாய் டைசனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டைசனுக்கு தற்போது சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.