Home மாவட்டங்கள் பெங்களூர் குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்

குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்

பெங்களூரு, ஆக. 16: பெற்றோர் வீட்டின் முன் விளையாட விட்டிருந்த சிறு குழந்தை ஒன்று, 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் மடிவாளாவில் உள்ள சிக்க ஆடுகோடியில் நேற்று காலை நடந்துள்ளது.

சிக்க ஆடுகோடியில் உள்ள வீட்டின் முன் காலை 10.50 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, கிரில் (Grill) மீது ஏறியபோது நிலைதடுமாறி 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த பிறகு குழந்தை துள்ளி மீண்டும் தரையில் மோதியதில் பலத்த காயமடைந்தது.

குழந்தை மாடியிலிருந்து கீழே விழும் பயங்கரக் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்ணாரக் கண்ட அப்பகுதி மக்கள், ஒரு கணமும் தாமதிக்காமல் குழந்தையைக் காப்பாற்ற ஓடிவந்தனர். பைக் மூலமாகவே குழந்தையைக் கொண்டு சென்ற உள்ளூர் மக்கள், உடனடியாக கோரமங்களாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிருக்குப் போராடி வருகிறது.