
மங்களூரு, ஆக. 16: மங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் கஞ்சா பயன்படுத்திய 4 இளைஞர்கள் உட்பட 5 பேரை நகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி கொணாஜே காவல் உதவி ஆய்வாளர் சுதீப் எம்.வி.க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உள்ளால் தாலுகா முடிபு கம்பளபதவு பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஆட்டோவில் வைத்து போதைப்பொருளை விற்க முயன்ற முகமது ஹனீஃப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1.50 லட்சம் மதிப்பிலான 15.17 கிராம் போதைப்பொருள், 10,000 மதிப்புள்ள செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நந்தாவரா ஹஃபீஸ் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நாளில், பர்கே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ தேவி கல்லூரி சாலையில் போதையில் சுற்றித் திரிந்த கேரளாவைச் சேர்ந்த அபய் ராஜ் என்ற வாலிபரை போலீசார் பிடித்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவர் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.













