Home மாவட்டங்கள் பெங்களூர் போக்குவரத்து போலீசாரை தாக்க முயன்ற ஜேடிஎஸ் முக்கிய பிரமுகர் கைது

போக்குவரத்து போலீசாரை தாக்க முயன்ற ஜேடிஎஸ் முக்கிய பிரமுகர் கைது

பெங்களூரு: ஆக. 17-
பெங்களூருவில் போக்குவரத்து போலீசாரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்ற வழக்க தொடர்பாக, மதச்சார்பற்ற ஜனதா தள (ஜே.டி.எஸ்.) கட்சியின் முக்கிய பிரமுகரான கொட்டிகெரே மஞ்சு என்பவரை ஹுளிமாவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
நேற்று பெங்களூரு கொட்டிகெரே பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அருண் என்ற போக்குவரத்து போலீஸ்காரர், ஜே.டி.எஸ். நிர்வாகி கொட்டிகெரே மஞ்சு வந்த காரை வழிமறித்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த கொட்டிகெரே மஞ்சு, காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ்காரர் அருணை பொதுமக்கள் மத்தியில் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்குதலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், “நீ இங்கு எப்படி வேலை செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்” என மிரட்டியவாறு போலீஸ்காரரைத் தள்ளிவிட்டு, காலால் உதைக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதுகுறித்து போலீஸ்காரர் அருண் அளித்த புகாரின் பேரில் ஹுளிமாவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, போலீஸ்காரருடன் கொட்டிகெரே மஞ்சு வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கொட்டிகெரே மஞ்சு, அங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹுளிமாவு போலீசார், அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.