Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.1.05 கோடி போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது

ரூ.1.05 கோடி போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது

பெங்களூரு: ஆக. 17-ஹாசன் – மங்களூரு சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரை அதிரடியாகக் கைது செய்தனர். பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்தவர் முகமது அமீர் ஜர்தாப் (வயது 35). இவர் ஹாசன் வழியாக மங்களூருவுக்கு காரில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்வதாக பந்த்வாள் கிராமப்புற போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பந்த்வாள் தாலுகா கடேசிவாலயா கிராமம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வெள்ளை நிற டொயோட்டா காரை மறித்துச் சோதனை செய்தனர்.
சோதனையில், காரில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த முகமது அமீர் ஜர்தாப்பை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 கோடியே 5 லட்சத்து 59 ஆயிரத்து 450 மதிப்பிலான 538.63 கிராம் எம்.டி.எம்.ஏ. (MDMA), 99.12 கிராம் கொக்கைன் மற்றும் காலி பிளாஸ்டிக் டப்பாக்கள், டிஜிட்டல் எடை மிஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருட்களை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார்? யாருக்கு விற்பனை செய்யக் கொண்டு சென்றார்? என்பது குறித்து பந்த்வாள் ஏ.எஸ்.பி. யஷ் குமார் சர்மா வழிகாட்டலில், இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.