Home தலைப்பு செய்தி கோர விபத்து : 15 பேர் பலி

கோர விபத்து : 15 பேர் பலி

பாட்னா: ஆக. 17-
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இந்திர முனேஸ்வர மகாதேவ் கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கொடிய நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சம்பவமாக, மேற்கு வங்காள மாநிலம் பீர் பூம் மாவட்டத்தில் உள்ள தாராபீட புண்ணிய தலத்தில் ஏற்பட்ட மின்கசிவு தீ விபத்தில் 7 யாத்ரீகர்கள் கொடூரமாக உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ இந்திரதமனேஸ்வர மகாதேவ் கோவில் வளாகத்தில் இன்று காலை ஏற்பட்ட கொடிய நெரிசலில் 7 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
6 கி.மீ. நீண்ட வரிசை
ஸ்ராவண மாதத்தின் 3-வது திங்கள்கிழமை என்பதால், இந்திரதமனேஸ்வர மகாதேவரை தரிசனம் செய்யவும், ஜலாபிஷேகம் செய்யவும் நேற்று இரவு முதலே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை உருவானது. பக்தர்கள் பல மணி நேரமாக காத்திருந்தனர்.
காலை 6.30 மணி முதல் 6.45 மணி அளவில், கோவில் அருகில் உள்ள அசோக் தாம் ஹால்ட் ரெயில் நிலையத்திற்கு இரு மார்க்கங்களிலும் ஒரே நேரத்தில் இரண்டு மின்சார ரெயில்கள் வந்தடைந்தன. இதனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான புதிய பக்தர்கள் கோவிலை நோக்கி படையெடுத்ததால் கூட்ட நெரிசலின் அழுத்தம் கடுமையாக அதிகரித்தது.
மின்கம்பம் விழுந்ததால் வதந்தி
அதே நேரத்தில் கோவில் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளின் (பேரிகார்டு) மீது பக்தர்களின் பாரம் அதிகரித்ததால், தடுப்புகள் சரிந்து விழுந்தன. நுழைவு வாயிலில் இருந்த குறுகிய வரிசையில் சில வாலிபர்கள் நுழைய முயன்றபோது குழப்பம் ஏற்பட்டு, வரிசையில் நின்ற பெண்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
அதே நேரத்தில் வளாகத்தில் இருந்த மின்கம்பம் ஒன்று கீழே விழுந்ததால், “மின்சாரம் பாய்கிறது” என்ற வதந்தி பக்தர்கள் இடையே காட்டுத்தீ போல் பரவியது. இந்த பீதியால் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கியதால் நெரிசலின் வீரியம் அதிகரித்தது.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
சம்பவத்திற்குப் பிறகு, மின்சாரம் தாக்கியதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற வதந்திகளை லக்கிசராய் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார் முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்த நேரத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது என்றும், பிரதான உயிரிழப்புகளுக்கு மின்சாரம் தாக்கியது காரணம் அல்ல, மாறாக நெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே காரணம் என்றும் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு லக்கிசராய் மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக லக்கிசராய் சதர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு மற்றும் கூட்ட நெரிசல் நிர்வாக தோல்வி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிறந்த சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் பீர் பூம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தபட்சம் 7 யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புண்ணிய தலமான தாராபீட கோவில் அருகே உள்ள 4 மாடி ஓட்டலின் தரை தளத்தில் அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான யாத்ரீகர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவத்திற்கான துல்லியமான காரணம் உடனடியாக தெரியாவிட்டாலும், மின்சாரக் கோளாறு (ஷார்ட் சர்க்யூட்) காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல்களை சேகரித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.