Home செய்திகள் உலக செய்திகள் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா ‘கைப்பற்றுவது’ சாத்தியமா?

ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா ‘கைப்பற்றுவது’ சாத்தியமா?

வாஷிங்டன், ஆக. 18- பாரசீக வளைகுடாவின் வாயிலில் அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணை, உலகப் பொருளாதாரத்தின் ‘இதயத் துடிப்பு’ என்று வர்ணிக்கப்படும் மிக முக்கியமான நீர் வழிப்பாதை. ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையைத் தீவிரமாக முன்வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போவதாக எச்சரித்துள்ளார். ஆனால், சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் மற்றும் ராணுவச் சவால்களைக் கடந்து ட்ரம்ப்பின் இந்த மிரட்டல் சாத்தியமாகுமா? போர்ச் சூழலும் ட்ரம்ப் அதிரடியும் அமெரிக்கா – ஈரான் இடையிலான ராணுவ மோதலால், ஹார்முஸ் நீரிணைப் பாதையை மூடியது ஈரான். தனது நட்பு நாடுகளின் கப்பல்களைத் தவிர மற்ற வணிகக் கப்பல்கள் அந்த வழியைக் கடக்கத் தடை விதித்தது. இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து எட்டப்பட்ட 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் திடீரென ரத்து செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள போலீஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “ஈரானை நாம் முழுமையாகப் போரில் தோற்கடித்த பின், ஹார்முஸ் நீரிணையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம். ஹார்முஸ் கடற்பகுதியைச் சுற்றி அமெரிக்கப் படைகள் இருப்பதால், இப்போதே அது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிதான்” எனத் தெரிவித்தார். ஈரானின் காரசாரமான எதிர்வினை ட்ரம்ப்பின் பேச்சைக் கடுமையாகக் கண்டித்த ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கஜீம் காஜிபாதாதி, “ஹார்முஸ் நீரிணையை ஒரு ட்வீட் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது பிரச்சாரப் பேச்சு மூலமாகவோ கைப்பற்றிவிட முடியாது. ஹார்முஸ் நீரிணை ஈரான் நாட்டுக்குரியது. ஈரானின் உத்தரவுக்கு ஏற்பவே அது திறக்கப்படும் அல்லது மூடப்படும்” எனப் பதிலடி கொடுத்தார். அதேவேளையில், ஓமன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி நீரிணைப் போக்குவரத்தைச் சீரமைக்க விரும்புவதாகவும் ஈரான் தெரிவித்தது. சட்டரீதியானத் தடைகளும் அதிகார வரம்பும்அ மெரிக்க முன்னாள் அரசின் தலைமை வழக்கறிஞர் புரூஸ் ஃபைன் கூறுகையில், “அமெரிக்க அரசியலமைப்பு ரீதியாக ஒரு நாட்டின் பகுதியைத் தனியாக இணைத்துக் கொள்ள ட்ரம்ம்புக்கு அதிகாரமில்லை. செனட்டின் அங்கீகாரமும் சட்டப்பூர்வ ஒப்பந்தமும் இன்றி இதைச் செய்வது ஐ.நா. சாசனத்தின்படி ஆக்கிரமிப்புக் குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார். சிட்னி பல்கலைக்கழக சர்வதேசச் சட்ட நிபுணர் நடாலி க்ளீன் கூறுகையில், “இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் மீது செலுத்திய அதிகாரத்தைப் போல ஈரான் மீது செலுத்தினால் ஒழிய இது சாத்தியமில்லை. தவிர, அமெரிக்காவில் 35 சதவீத மக்கள் மட்டுமே இப்போரை ஆதரிக்கின்றனர்” எனச் சுட்டிக்காட்டினார். மேலும், அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் குறைந்து வருவதாகவும், பெட்ரோல் விலை உயர்வே அமெரிக்கர்களுக்கு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 1982-ம் ஆண்டு ஒப்பந்தப்படி, சர்வதேச நீரிணைகளில் வணிகக் கப்பல்களுக்கு ‘தடையற்றப் பயண உரிமை’ உண்டு. இந்த எல்லைகள் (ஹார்முஸ் நீரிணை) ஈரான் மற்றும் ஓமனின் பிராந்தியக் கடல் எல்லைக்குள் வருகிறது. ஆனாலும் முழுமையாக அந்த நாடுகளுக்கும் சொந்தமில்லை என்பதால் அமெரிக்கா தனித்து இறையாண்மை செலுத்த முடியாது.