
பெங்களூரு: ஆக. 18-
பெங்களூரு அருகே உள்ள சிக்கபாணவாராவின் குட்டே பசவபுராவில் தந்தையும் அவரது மகனும் கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி முடிச்சை அவிழ்த்துள்ளனர். இதில், உயிரிழந்தவரின் மனைவியே இக்கொடூரச் செயலைச் செய்த கொலையாளி என்பது அம்பலமாகியுள்ளது.
இவ்வழக்கின் விசாரணையின் போது, உயிரிழந்த அபிநந்தன் என்பவரின் மனைவி ஹரிணி, தனது கள்ளக்காதலன் வினய் என்பவனுடன் சேர்ந்து கணவனையும் மகனையும் கொலை செய்ததைச் சிக்கபாணவாரா காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு 11 மணியளவில், ஹரிணி தனது கள்ளக்காதலன் வினய்யை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதற்கு முன்பாகவே வீட்டில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களை அவர் அணைத்து வைத்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து அபிநந்தனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். வீட்டில் இருந்த சமையல் கரண்டியால் அபிநந்தனின் தலையில் பலமாகத் தாக்கி அவரைக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தை இவர்களின் மகன் யதுவீர் பார்த்துவிட்டான். இதனால் எதிர்காலத்தில் தங்களுக்குப் பிரச்சனை வரும் என்று பயந்த ஹரிணியும் வினய்யும், சிறுவனின் மூச்சை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு ஆதாரங்களை அழிப்பதற்காக, ஹரிணி வீட்டில் சிந்தியிருந்த ரத்தக் கறைகளைக் கழுவி சுத்தப்படுத்தியுள்ளார். மேலும், அபிநந்தனின் ரத்தக் கறை படிந்த ஆடைகளை மாற்றி, நடுஇரவிலேயே அவற்றை துவைத்துப் போட்டுள்ளார். அதன் பிறகு, சிறுவன் மெத்தையில் தூங்கும்போது மூச்சுத்திணறி இறந்ததைப் போலக் காட்டுவதற்கு நாடகமாடியதாக ஹரிணி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி கொலையை முடித்த பிறகு கள்ளக்காதலன் வினய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தப்பியோடிய வினய்யைப் பிடிக்கச் சிக்கபாணவாரா காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.












