
பெங்களூரு, ஆக. 18:
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி) பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கே.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாவுக்கார் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை (இ.டி) இன்று பிரம்மாண்ட அதிரடி சோதனையில் இறங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத்தில் உள்ள 21 இடங்களில் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது.
விதானசவுதாவுக்கு அருகிலேயே உள்ள கே.பி.எஸ்.சி அலுவலகத்திற்கும் 4 வாகனங்களில் வந்திறங்கிய 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு, தீவிர ஆவணப் பரிசீலனையில் ஈடுபட்டது.
கே.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாவுக்காரின் வீடு, கே.பி.எஸ்.சி உறுப்பினர் சாந்தா கொசமனிக்குத் தொடர்புடைய இடங்கள், இடைத்தரகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், மேலும் தேர்வு விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யும் ‘எம்.எஸ். எடுடெஸ்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் அலுவலகத்திலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வில் தேர்ச்சியடைந்த சில தேர்வர்களின் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
ரூ.80 லட்சம் வரை லஞ்சப் புகார்:
கே.பி.எஸ்.சி மூலம் நடைபெற்ற 400 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நியமனத்தில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக சமீபத்தில் புகார்கள் வெடித்தன. இடைத்தரகர்கள் மூலமாகத் தேர்வர்களிடம் ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விடைத்தாள்கள் மற்றும் ஓ.எம்.ஆர் தாள்களில் திருத்தம் செய்தது, தேர்வு நடைமுறைகளில் முறைகேடு, தேர்வர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கசியவிட்டது மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு சாதகமாகச் செயல்பட்டது குறித்தும் புகார்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக விதானசவுதா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாள் தலைவருக்கு நெருக்கடி:
கே.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் சிவசங்கரப்பாவின் கல்புரகி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கால்நடை மருத்துவர் நியமன ஊழலில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கல்புரகியில் உள்ள அவரது வீட்டில் முக்கிய ஆவணங்களை இ.டி அதிகாரிகள் அங்குலம் அங்குலமாகச் சேகரித்து வருகின்றனர்.
கால்நடை மருத்துவர் நியமன ஊழலில் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, ஜூலை 13-ஆம் தேதி சிவசங்கரப்பாவை ஆளுநர் சஸ்பெண்ட் செய்திருந்தார். தற்போது பணப் பரிமாற்ற சந்தேகத்தின் பேரில் இ.டி அதிகாரிகள் களமிறங்கியிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை பாயும் எனத் தெரிகிறது.
இவ்வழக்கு தொடர்பாக விதானசவுதா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவானதைத் தொடர்ந்து, விசாரணையை மாநில அரசு சி.ஐ.டி-க்கு மாற்றியது. சி.ஐ.டி விசாரணை தீவிரமடைந்த நிலையில், கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்ததால் அமலாக்கத்துறை களத்தில் குதித்துள்ளது. தலைநகர் பெங்களூரு, பெலகாவி, ராய்ச்சூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 21 இடங்களில் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் உயர் நீதிமன்றமும், சி.ஐ.டி சிறப்பு நீதிமன்றமும் சிவசங்கரப்பா சாவுக்காரின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்திருந்தன. தற்போது இ.டி சோதனையால், கே.பி.எஸ்.சி முறைகேடு வலையில் சிக்கியுள்ள உயர் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களுக்குக் கைது பீதி தொற்றிக்கொண்டுள்ளது.
சாவுக்கார் சஸ்பெண்ட் பின்னணி:
கே.பி.எஸ்.சி தலைவராக இருந்த சிவசங்கரப்பா சாவுக்கார், தனது மகள்களின் தேர்வு நடைமுறையில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேட்டிற்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்த ஜூலை 13 அன்று ஆளுநரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கை விசாரணை செய்ய குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
தற்போது கால்நடை மருத்துவர் நியமன முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக 21 இடங்களில் இ.டி நடத்தியுள்ள இந்தச் சோதனை, வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைபற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













