Home மாவட்டங்கள் பெங்களூர் திருமணமான பெண் தற்கொலை

திருமணமான பெண் தற்கொலை

பெங்களூர்: ஆக. 21-
ஒருதலைக் காதலனின் தொல்லை தாங்க முடியாமல் திருமணமான இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு இந்திரா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பெங்களூரு இந்திரா நகர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கவிதா (வயது 21). இவருக்கு கடந்த 2024-ம் ஆண்டு ராஜு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், கிரண் என்ற இளைஞர் கடந்த 3 ஆண்டுகளாக கவிதாவை காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கவிதாவின் குடும்பத்தினர், கிரணை அழைத்து எச்சரித்து புத்திமதி கூறினர். அதன்பிறகே கவிதாவுக்கு ராஜுவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணத்திற்கு பிறகும் கிரண் தனது புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை. கவிதாவுக்கு தொடர்ந்து செல்போனில் மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். “எனக்கு பதில் மெசேஜ் அனுப்பவில்லை என்றால் நான் செத்து விடுவேன்; என் வாழ்க்கையை பாழாக்கிய உன்னையும் வாழ விடமாட்டேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கவிதா தனது கணவர் ராஜு மற்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளான கவிதா, கடந்த ஆகஸ்ட் 6-ந்தேதி வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஒருதலைக் காதலன் கிரணின் தொல்லையால்தான் கவிதா தற்கொலை செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக கிரணை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.