
பாட்னா: ஆக.26-
பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) 70-வது தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் உள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் இல்லத்தை முற்றுகையிட நேற்று பேரணி சென்றனர். அப்போது, மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.
பிஹார் மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 70-வது தேர்வு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அந்த தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாகத் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் மாணவர்கள் பேரணி தொடங்கினர்.
முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் இல்லத்தை நோக்கி மாணவர்கள் செல்வதைத் தடுக்க வழியெங்கும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும், மாணவர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு முன்னேற முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. இதையடுத்து, பல இடங்களில் போலீஸார் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கையையும் மீறி மாணவர்கள் முதல்வர் இல்லத்தின் அருகே முற்றுகையிட சென்றனர். இதையடுத்து பல போராட்டக்காரர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
பிபிஎஸ்சி – டிஆர்இ 4 தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். பணி நியமன செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.












