Home மாவட்டங்கள் பெங்களூர் உயிரிழந்த பிச்சைக்கார மூதாட்டி; வீட்டிலிருந்து ரூ.8.40 லட்சம் மீட்பு

உயிரிழந்த பிச்சைக்கார மூதாட்டி; வீட்டிலிருந்து ரூ.8.40 லட்சம் மீட்பு

மாண்டியா: ஆக. 26-
பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி இறந்த பின், அவர் வீட்டில் இருந்த 30 மூட்டைகளில், 8.40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், மாண்டியா நகர் குதலு பகுதியைச் சேர்ந்தவர் நுார் உன்னிசா, 70. இவரும், இவரது சகோதரியும் தனியே வசித்து வந்தனர்; திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களது இரு சகோதரர்கள் திருமணம் செய்து, தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
சகோதரிகள் இருவரும், அங்கிருந்த மசூதி முன் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், நுாரின் சகோதரி உயிரிழந்தார். வாடகை வீட்டில் தனியே வசித்த நுார், உடல்நலம் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு முன் உயிரிழந்தார். அக்கம் பக்கம் வசித்தவர்கள், அவருக்கு இறுதி சடங்கு செய்தனர்.
காரியங்கள் முடிந்ததும், அவரின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். இதில், பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேமித்து வைத்த பணம், 30க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரொக்கமாகவும், சில்லரையாகவும் இருந்தது.
இந்த பணத்தை கடந்த 23ம் தேதி எண்ணினர். அன்று இரவு வரை, 8 லட்சம் ரூபாய் வரை இருப்பது தெரிந்தது. பெரும்பாலும் சில்லரை காசுகளாக இருந்ததால் அடுத்தடுத்த நாட்களிலும் எண்ணும் பணி நடந்தது. நேற்று முன்தினம் இரவு இப்பணி முடிந்தபோது, மொத்தமாக 8 லட்சத்து,40,000 ரூபாய் இருந்தது.
இது தொடர்பாக அவரின் சகோதரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலர், ‘மசூதி முன் நுார் பிச்சை எடுத்ததால், அந்த பணத்தை மசூதிக்கு நன்கொடையாக எடுத்து கொள்ளலாம்’ என கூறினர். இதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகிகள், முறைப்படி உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.
நுாரின் ஒரு சகோதரர், வசதியாக இருப்பதால், தனக்கு அந்த பணம் வேண்டாம் என்று கூறிவிட்டார். மற்றொரு சகோதரர், மசூதி நிர்வாகிகளிடம் பேசி, பணத்தை பெற்றுக்கொண்டார்.