Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூர் ஓட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதல்: மீறினால் கடும் நடவடிக்கை

பெங்களூர் ஓட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதல்: மீறினால் கடும் நடவடிக்கை

பெங்களூரு: ஆக. 26-
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு வணிக நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் துப்புரவு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை புதிய வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் 16 முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை நடைமுறைப்படுத்த சுகாதாரத் துறை 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனையின்போது வித மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வின் போது பல்வேறு உணவகங்களில் சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) உரிமம் அல்லது பதிவு பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான, தரமான மற்றும் மனித நுகர்வுக்கு உகந்த உணவுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். காலாவதியான, அழுகிய அல்லது தரமற்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது. நம்பிக்கையான இடங்களிலிருந்து மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பேட்ச் எண்களை சரிபார்த்து சரியான வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். சமையலறை, உணவு தயாரிக்கும் இடம், தரை, சுவர்கள் மற்றும் கூரைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பழுதான சுவர்கள் மற்றும் டைல்ஸ்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். உணவுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், வெட்டும் பலகைகள் மற்றும் கத்திகளை முறைப்படி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும், பூச்சி கட்டுப்பாடு, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம், பாதுகாப்பான நீர் மற்றும் ஐஸ் கட்டிகள் பயன்பாடு, உணவு கழிவு மேலாண்மை மற்றும் அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும், அப்போது விதிகளை மீறும் உணவகங்களின் மீது 2006-ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.