
பெங்களூர், ஆகஸ்ட் 28-
சைபர் கிரைம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மத்தியப் பிரதேசத்திற்குச் சென்ற பெங்களூரு நகர காவல் ஆய்வாளர் ரவி, போபால் அருகே நடந்த கோரமான வீதி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தென்கிழக்கு மண்டல சி.இ.என் (சைபர் கிரைம்) காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ரவி கே.பி., ஒரு வழக்கு விசாரணைக்காகத் தனது காவல் படையினருடன் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றிருந்தார்.அங்கிருந்து போபாலில் இருந்து இந்தூருக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மேம்பாலத்திலிருந்து சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆய்வாளர் ரவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் சென்ற உதவி ஆய்வாளர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு காவலர் அசோக் நாயக் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.உயிரிழந்த ஆய்வாளர் ரவி கே.பி. 2007-ஆம் ஆண்டு பேட்ச் காவல் அதிகாரி ஆவார். இவர் இதற்கு முன்பு அசோக் நகர், இந்திரா நகர் மற்றும் கோரமங்களா ஆகிய காவல் நிலையங்களில் சிறப்பான சேவையாற்றியுள்ளார்.
கடமைக்காகச் சென்ற இடத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் பெங்களூரு காவல் துறையினர் மற்றும் அவரது சக ஊழியர்களிடையே கடுமையான அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.













