
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- பயணத்திற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாகத்தான் இருக்கும் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்தார். நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் வழங்க இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசரகால நிவாரணப் பொருட்களை அனுப்பிய முதல் நாடு இந்தியாவாகும். சி-130ஜே (C-130J) விமானம் மூலம் முதற்கட்டமாக 10 டன் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை அனுப்பியது. இந்நிலையில் நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறியதாவது: பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து நாங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளோம். அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்குத்தான் இருக்கும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இது நடக்கும் என்று நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.















