Home மாவட்டங்கள் பெங்களூர் கோலார் சிக்கள்ளாபூரில் கோர விபத்து – 7 பேர் சாவு

கோலார் சிக்கள்ளாபூரில் கோர விபத்து – 7 பேர் சாவு

கோலார்/சிக்கபள்ளாபூர், செப். 7-
கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் சிக்கபள்ளாபூர் மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு பயங்கர சாலை விபத்துகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு காரில் பெங்களூரு திரும்பிச் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர், கே.ஜி.எஃப் தாலுகா தொட்டகாரி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்று சாலைத் தடுப்பில் (டிவைடர்) மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பெங்களூரு வித்யாரண்யபுரத்தைச் சேர்ந்த சாரதம்மா (70), தீக்ஷிதா (25), தேவேந்திர குமார் (41) மற்றும் ஜிஷ்ணு (13) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரில் இருந்த விகாஸ், நீது, ஆத்விகா ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பங்காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து பேதமங்கலா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்தில், சிக்கபள்ளாபூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா கொத்தனூர் கேட் அருகே, பூப்பறிக்கும் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆம்னி காரும், மினி கூட்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
மல்லிகார்ஜுனபுரா கிராமத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்களை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. இதில் மல்லிகார்ஜுனபுரத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிட்லகட்டா தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிட்லகட்டா கிராமப்புற காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.