Home மாவட்டங்கள் பெங்களூர் ஐ.எஸ்.டி. டி.ஜி.பி.யாக பி.தயானந்த் பொறுப்பேற்பு

ஐ.எஸ்.டி. டி.ஜி.பி.யாக பி.தயானந்த் பொறுப்பேற்பு

பெங்களூர்: செப். 9-
கர்நாடக மாநில உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் (ஐ.எஸ்.டி.) புதிய தலைமை போலீஸ் டைரக்டர் ஜெனரலாக (டி.ஜி.பி.) பி.தயானந்த் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு பெங்களூரு சின்னச்சாமி மைதானம் அருகே ஆர்.சி.பி. அணியின் வெற்றி விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது பெங்களூரு நகர போலீஸ் கமிஷ்னராக இருந்த பி.தயானந்த் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டு, மாநில போலீஸ் பயிற்சிப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.யாக (ஏ.டி.ஜி.பி.) அவர் பணியாற்றி வந்தார். இதனிடையே, துறைரீதியான விசாரணையில் அவர் மீது தவறு ஏதுமில்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வை வழங்கி, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. பதவி உயர்வைத் தொடர்ந்து, மாநில உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் தலைவராக பி.தயானந்த் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.