
வாஷிங்டன், செப். 26- அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு, அமெரிக்க அரசு சார்பில் சிறப்பு அரசு விருந்து அளிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஆழமான பதற்றம் நிலவி வரும் சூழலில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை இரவு இந்த விருந்து நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்று, மிக ஆடம்பரமான முறையில் விருந்து அளித்து உபசரித்தார். இந்தச் சிறப்பு விருந்தில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், என்விடியா நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான தலைவர்களின் பேச்சுவார்த்தையில் வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதை இந்த விருந்து உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா–சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளும் பதற்றங்களும் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளின் தலைவர்களும் நேரடியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. விருந்தின்போது பேசிய அதிபர் ட்ரம்ப், “நானும் அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு வேறுபட்ட நிர்வாக முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். இருந்தாலும், நமது நாட்டு மக்களுக்கிடையிலான பிணைப்பு எப்போதும் தொடரும்” என்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், “அமெரிக்காவும் சீனாவும் அமைதியுடன் இணைந்து வாழ வேண்டும். அதே நேரத்தில், பொறுப்புள்ள முதன்மை நாடுகளாகவும் செயல்பட வேண்டும்” என்றார். இரு தலைவர்களின் உரைகளிலும், வேறுபாடுகள் இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் மக்களிடையிலான தொடர்பு தொடர வேண்டும் என்ற கருத்து இடம்பெற்றது.














