Home செய்திகள் தேசிய செய்திகள் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில்?

குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில்?

புதுடெல்லி: நவம்பர் 16-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தொகுதி மறுவரையறையுடன் தொடர்புடைய அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 543-ல் இருந்து அதிகபட்சமாக 850 ஆக உயர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் மூலம் 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். தற்போது 540 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், மசோதாவுக்கு 361 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். ஆனால், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 320 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேவைப்படுகிறது.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. எனவே, குளிர்கால கூட்டத்தொடரில் இந்தப் பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்ற கவலையும் எழுந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை அதிகரித்து, மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய விகிதாசாரத்தைத் தக்கவைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுதொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை