
சபரிமலை: நவம்பர் 16-
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.
தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து, 18-ம் படிக்கு கீழே உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.
சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் மந்திரம் சொல்லி பொறுப்பேற்றுக் கொள்வார்கள். பின்னர் தந்திரி முன்னிலையில் இருவருக்கும் அபிஷேகம் நடைபெறும். வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
கார்த்திகை 1-ந் தேதியான நாளை முதல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் புதிய மேல்சாந்தி சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து பூஜைகளை நடத்துவார்.தினமும் அதிகாலை நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உச்ச பூஜை ஆகியவை நடைபெறும். மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். அத்தாள பூஜைக்குப் பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
அடுத்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். தினமும் 18 மணி நேர தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9 ஆயிரம் போலீசாரும், சுகாதாரத்துறை சார்பில் 100 டாக்டர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் ஆன்லைன் முன்பதிவில் 66 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவில் 14 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
















