Home செய்திகள் தேசிய செய்திகள் ராஜஸ்தான் ரயில் பாதை குண்டுவெடிப்பில் இருவர் கைது

ராஜஸ்தான் ரயில் பாதை குண்டுவெடிப்பில் இருவர் கைது

சண்டிகர்: நவம்பர் 16-
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் அருகே ரயில் தண்டவாளத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன்
தொடர்பில் இருந்த பெண் உட்பட இருவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்புப் படை, ஸ்ரீகங்காநகர் காவல்துறை, பஞ்சாப் காவல்துறை ஆகியவை இணைந்து நடத்திய நடவடிக்கையில், 21 வயது மஹக்தீப் கவுர், 22 வயது தவீந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மஹக்தீப் கவுர், பாகிஸ்தானைச் சேர்ந்த ‘சாச்சா’ மற்றும் ‘ஷா’ ஆகிய இருவருடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காதல் மொழிகளாலும் பணத்தாலும் மஹக்தீப் கவுரைத் தங்கள் வலையில் வீழ்த்திய அந்த இருவரும், ரயில் பாதையில் குண்டுவெடிப்பு நடத்த அவருக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவரிடமிருந்து 2 ஆயுதங்கள், 46 தோட்டாக்கள் மற்றும் ரூ.30,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மஹக்தீப் கவுருக்கு தங்குமிடம், மோட்டார் சைக்கிள், சம்பவ இடத்துக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதி ஆகியவற்றை வழங்கி உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 3 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இத்தகைய முறையை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அடிக்கடி கையாள்வதாக காவல்துறை கூறியுள்ளது. ஸ்ரீகங்காநகரைச் சேர்ந்த பபிதா என்ற பெண்ணையும்
ஐஎஸ்ஐ இதே முறையில் வலையில் வீழ்த்தியதாக காவல்துறை முன்பு தெரிவித்திருந்தது.
மஹக்தீப் கவுர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும்,
அவரது கணவர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தற்போது சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகங்காநகர் அருகே ராம்சிங்புர் பகுதியில் நவம்பர் 3-ம் தேதி இரவு 9.45 மணியளவில் இந்தத் தண்டவாள குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதில் ரயில் பாதையின் 2 ஸ்லீப்பர் கட்டைகள் நொறுங்கியதுடன், தண்டவாளம் சேதமடைந்து 2.5 அடி ஆழத்தில் பள்ளமும் ஏற்பட்டது