Home செய்திகள் உலக செய்திகள் மெக்சிகோ போதை சாம்ராஜ்யத்தின் ‘காட் பாதர்’ மறைவு

மெக்சிகோ போதை சாம்ராஜ்யத்தின் ‘காட் பாதர்’ மறைவு

மெக்சிகோ: நவம்பர் 16-
மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தின் ‘காட் பாதர்’ என அழைக்கப்பட்ட கும்பல் தலைவர் மிகுவல் ஏஞ்சல் பெலிக்ஸ் கல்லார்டோ காலமானார். அவருக்கு வயது 80.குவாடலஹாரா அருகே உள்ள புவென்டே கிராண்டே சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கல்லார்டோ, கடந்த சில காலமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் குவாடலஹாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
உறுப்பு செயலிழப்பே அவரது மரணத்துக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
1989-ல் கைது செய்யப்பட்டதிலிருந்து கல்லார்டோ சிறையில் இருந்து வந்தார். ‘எல் ஜெபே டி ஜெபே’ (தலைவர்களின் தலைவர்), ‘எல் பட்ரினோ’ (காட் பாதர்) ஆகிய பட்டப்பெயர்களால் அவர் அறியப்பட்டார்.
சாதாரண காவல்துறை அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கல்லார்டோ, 1980-களில் ‘கேங்லார்ட்’ என்ற கும்பலை நிறுவினார். பின்னர் கொக்கைன் கடத்தலில் முக்கிய சக்தியாக உருவெடுத்த அவர், பாப்லோ எஸ்கோபரின் மெடலின் கார்டெல் உள்ளிட்ட கொலம்பிய போதைப்பொருள் குழுக்களுடன் முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அமெரிக்காவுக்கு விநியோகிக்கப்பட்ட கொக்கைனின் பெரும்பகுதியை அவர் கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஊழல் மூலம் அரசியல் மற்றும் சட்ட அமைப்புகளிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தினார்.
1985-ல் அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாக முகவர் என்ரிக்கை கமரேனாவைக் கடத்தி, சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்துக்குப் பிறகு கல்லார்டோவின் வீழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து ஏற்பட்ட சர்வதேச அழுத்தம், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அரசுகளின் பெரிய தேடுதல் வேட்டைக்கு வழிவகுத்தது.
1989-ல் கைது செய்யப்பட்ட கல்லார்டோவுக்கு போதைப்பொருள் கடத்தல், கமரேனா கொலை வழக்குகளில் நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இறுதிவரை தான் நிரபராதி என அவர் கூறிவந்தார். அவரது கைதுக்குப் பிறகு கேங்லார்ட் கார்டெல் சிதைந்தது. அதற்குப் பதிலாக சினாலோவா கார்டெல் உள்ளிட்ட புதிய அமைப்புகள் தோன்றின. கல்லார்டோவிடம் பணியாற்றிய ஜோவாகின் ‘எல் சாப்போ’ குஸ்மான் பின்னர் சினாலோவா கார்டெல் தலைவராக உயர்ந்தார்