Home மாவட்டங்கள் சென்னை ஆளுநர் அழைப்பு: தலைமைச் செயலாளர், டிஜிபி சந்திப்பு

ஆளுநர் அழைப்பு: தலைமைச் செயலாளர், டிஜிபி சந்திப்பு

சென்னை, நவ. 16-
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலைமை மற்றும் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் மீதான சர்ச்சைகள் தொடர்பாக அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், தலைமைச் செயலாளர் எம். சாய் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் நேரில் சந்திக்க அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) சுமார் 40 நிமிடங்கள் சந்தித்து, தமிழக நிலவரம் குறித்த அறிக்கையை ஆளுநர் சமர்ப்பித்தார். பின்னர், ஜம்மு–காஷ்மீர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவர், மாநிலத்தின் நிர்வாக மற்றும் காவல்துறைத் தலைவர்களை அழைத்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவுக்கு தவெக எம்.எல்.ஏ. சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம்–ஒழுங்கு நிலைமை ஆகியவை குறித்து விளக்கம் பெறுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்திக்கும் நேரத்தில், தமிழகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. தீபாவளியையொட்டி நடந்த தொடர் கொலைகள், தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், மதுரையில் நகைக்கடை கொள்ளை ஆகியவற்றில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆளுநர் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. மேலும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் நெருக்கடி, அதுதொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவையும் விவாதிக்கப்பட உள்ளன. மனு கொடுக்க வந்த பொதுமக்களை சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் தாக்கியதாக எழுந்துள்ள புகார் குறித்தும் ஆளுநர் கேட்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், முதல்வர் விஜய் தொடர்ந்து மூன்று நாட்களாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, குற்றங்களைத் தடுக்க உத்தரவிட்டுள்ளார். சர்ச்சைகளில் சிக்கிய மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்கள் விசாரணையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.