
பாங்காக்: நவ. 16-
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தீவான புகெட்டின் பாடோங் பகுதியில் உள்ள நான்கு மாடி வணிக கட்டிடத்தில் இன்று (நவம்பர் 16) அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடோங் கடற்கரைக்கு அருகிலுள்ள பாங் முவாங் சாய் கோர் சாலையில் அமைந்துள்ள வாகன வாடகை நிறுவனம், விற்பனை அலுவலகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் செயல்படும் கட்டிடத்தில் அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியது. கட்டிடத்தின் தரைதளத்தில் 100 இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், அவற்றிலிருந்த எரிபொருள், ரப்பர் டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் காரணமாக தீ மளமளவென அருகிலுள்ள ஐந்து வணிகக் கட்டிடங்களுக்கும் பரவியது.













