
சென்னை, நவ. 16-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்த கருத்துக்கு, தற்போதைய மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அளித்த பதிலடி, தமிழக காங்கிரஸில் மீண்டும் உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் விமர்சனம் செய்ததால் சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாகக் காணப்பட்டது.
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய நிலை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை” என்று தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரை நேரடியாகச் சுட்டிக்காட்டிய அவர், “‘சனியன் பிடித்தவர்கள்’ என்று மாணிக்கம் தாகூர் யாரைக் குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை. 2009-ல் சோனியா காந்தி தலைவராக இருந்தார். ராகுல் காந்தி இளைஞர் அணியைப் பார்த்துக்கொண்டிருந்தார். எனவே, அவர் யாரைக் குறிப்பிட்டு அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார். மேலும், கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ.வை மாணிக்கம் தாகூர் ‘பாவம்’ என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய செல்வப்பெருந்தகை, “அப்படியானால் எப்ஸ்டீனையும், ஜெம் வீரமணியையும் கூடப் பாவம் என்று சொல்ல முடியுமா?” என விமர்சித்தார். இதற்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதிலில், “செல்வப்பெருந்தகை கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் தற்போது காங்கிரஸில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளைகளுடன் ஒப்பிடும்போது, இப்போது குற்றங்கள் குறைவாகவே உள்ளன. தற்போது நடக்கும் நேர்மையான ஆட்சியைப் பார்ப்பவர்களுக்குத்தான் பயம். திருட்டு, ஊழல் செய்தவர்கள்தான் இவ்வாறு புலம்புவார்கள்” என்றார். இந்த மோதல் குறித்து அமைச்சர் விஸ்வநாதன், செல்வப்பெருந்தகை எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதும், எந்தக் கட்சியிலிருந்து கொண்டு பேசுகிறார் என்பதும் புரியவில்லை என்றும், முதலில் அவர் எந்தக் கட்சிக்குச் செல்லப்போகிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். இந்த வார்த்தைப் போர்களால் தமிழக காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் கிளம்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.













