
கள்ளக்குறிச்சி: நவ. 18-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் 4 மற்றும் 2 வயதுடைய இரு பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். பாம்பு கடிக்கு ஆளான குழந்தைகளின் தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சங்கராபுரம் அருகே போக்கனூர் ஏரிக்கரையோரம் வசித்து வருபவர் சந்திரன். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு தேவதர்ஷினி (4), தேவஜனனி (2) என இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.நேற்றிரவு புஷ்பா தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, தூங்கிக் கொண்டிருந்த புஷ்பா மற்றும் அவரது இரு குழந்தைகளையும் கடித்ததாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் மூவரும் பாம்பு கடிக்கு ஆளானதால் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பு கடித்த அதிர்ச்சியில் புஷ்பா கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, புஷ்பா மற்றும் இரு குழந்தைகளும் பாம்பு கடிக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு மருத்துவர்கள் மூவருக்கும் சிகிச்சை அளித்தனர். இரு குழந்தைகளையும் காப்பாற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. சிகிச்சை பலனின்றி தேவதர்ஷினி, தேவஜனனி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இரு சிறுமிகளின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பாவுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.














