Home மாவட்டங்கள் பெங்களூர் புதிய வீட்டிற்குள் புகுந்து தம்பதிக்கு கத்தியை காட்டி நகை பணம் கொள்ளை

புதிய வீட்டிற்குள் புகுந்து தம்பதிக்கு கத்தியை காட்டி நகை பணம் கொள்ளை

பெங்களூரு, நவ. 18-
தேவனஹள்ளி தாலுகா கிராமத்தில், கடன் வாங்கி கனவு இல்லம் கட்டி புதுமனை புகுவிழா கொண்டாடிய மகிழ்ச்சியில் இருந்த வீட்டிற்குள் புகுந்த 3 முகமூடி கொள்ளையர்கள், தம்பதிக்கு நீளமான கத்தி மற்றும் அரிவாள் காட்டி மிரட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
புர கிராமத்தை சேர்ந்தவர் மலே சொண்ணப்பா. இவர் கடன் வாங்கி புதிய வீடு கட்டி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் புதுமனை புகுவிழா (கிரகப்பிரவேசம்) நடத்தினார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு கருப்பு நிற பல்சர் பைக்கில் வந்த 3 முகமூடி கொள்ளையர்கள், சிமெண்ட் செங்கல்லால் வீட்டின் முக்கிய கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வர முயன்ற தம்பதியை, கொள்ளையர்கள் கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினர். சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என எச்சரித்து, வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.
117 கிராம் தங்கம் கொள்ளை
வீட்டில் இருந்த சுமார் 117 கிராம் தங்க நகைகள், ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த கருப்பு நிற பல்சர் பைக்கிலேயே தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் முகத்தில் மாஸ்க் மற்றும் மங்கி கேப் அணிந்திருந்ததால், அவர்களின் அடையாளத்தை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாக உள்ளது.
கைரேகை நிபுணர்கள் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விஜயபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் குழுவினரும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஊரக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாந்த் தலைமையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடன் வாங்கி கட்டிய புதிய வீட்டில் நிம்மதியான வாழ்க்கையை தொடங்க நினைத்த குடும்பத்திற்கு இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுமனை புகுவிழா நடந்து ஒரு மாதமே ஆன நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் புர கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விஜயபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.