
பெங்களூரு, அக். 17- இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதான ஆடுகளம் தட்டையானது. மேலும் குறுகிய பவுண்டரிகள் கொண்டதால் இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும். இருப்பினும், கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்த மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்தக் காலகட்டத்தில் ஐபிஎல் தொடரின் சில ஆட்டங்களைத் தவிர, பெரிய அளவிலான போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால், ஆடுகளத்தின் தற்போதைய தன்மையைப் பற்றி இரு அணிகளுக்கும் போதிய பரிச்சயம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
இது இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை ஓரளவுக்குச் சமநிலைப்படுத்தக்கூடும். இந்தச் சூழலில், இந்திய அணி குல்தீப் யாதவை மீண்டும் விளையாடும் லெவனில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும். ஏனெனில் அவர் கடைசி 2 ஆட்டங்களில் அணியில் சேர்க்கப்படவில்லை. இதுஒருபுறம் இருக்க வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த போட்டியில் பேட்டிங்கின் போது காயம் அடைந்தார்.
















