
புதுடெல்லி: நவ. 24-
நேபாளத்தின் வளர்ச்சி மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.15,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் அயோத்தியில் இருந்து சீதா தேவி பிறந்த நேபாளத்தின் ஜனக்பூருக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டது.
நேபாள பிரதமராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற பாலேந்திர ஷா, முதல்முறையாக இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று காலை அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பாலேந்திர ஷா சந்தித்து சுமார் 100 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ள நிவாரணம் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக இந்தியாவின் சார்பில் ரூ.15,000 கோடி (நேபாள ரூபாய் மதிப்பில் ரூ.24,000 கோடி) நிதியுதவி வழங்கப்படும்.
பகவான் ராமரும் சீதா தேவியும் இரு நாடுகளையும் இணைக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு சீதா தேவியின் பிறப்பிடமான நேபாளத்தின் ஜனக்பூருக்குச் சென்றிருந்தேன். அப்போது, நேபாளம் இல்லாமல் இந்தியாவின் புனிதத் தலங்களும், பகவான் ராமரும் முழுமை பெற முடியாது என்று தெரிவித்திருந்தேன். அதே கருத்தை இப்போதும் வலியுறுத்துகிறேன். இரு நாடுகளும் இணைந்து ராமாயணத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா கூறும்போது, “நேபாளத்துக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.













