Home மாவட்டங்கள் பெங்களூர் நான்கு நாள் வங்கி முடக்கம்

நான்கு நாள் வங்கி முடக்கம்

சென்னை: செப்.10-
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு முழுவதும் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி என, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழகப் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி கூறியதாவது: வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், இரண்டு கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், வரும் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.